இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசவுள்ளேன்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

“ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசுடனும், இந்திய அரசுடனும் பேசவுள்ளேன்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
யாழ். நெடுந்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இந்த விடயத்தை அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்திய மீனவர்களின் அத்துமீறல் வருகை இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தை அரைவாசி அழித்துவிட்டது. தமது பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாத நிலையிலும், இயல்பு வாழ்க்கையை இழந்த நிலையிலும் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள்.
குறிப்பாக யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகளில் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பொருளாதாரம் பெரியளவில் தற்போது அழிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான அடிப்படைக் காரணமே இந்திய மீனவர்களின் அத்துமீறல் வருகைதான்.
அவரகளுடைய மீன்பிடிப் பொறிமுறைகளால் எமது பகுதி மக்களின் மீன்பிடி வலைகள் அறுந்துள்ளன. அத்துடன் உற்பத்திகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் எமது பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
குறிப்பாக புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மேலும் அவர்களது வாழ்வாதாரங்களை அழிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கின்றது.
இது தொடர்பாக நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் பலர் என்னிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, முன்பெல்லாம் வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே இந்திய மீனவர்கள் வருவார்கள். இடைப்பட்ட நாட்களில் எமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கின்றது. இப்பொழுது அதற்குக் கூட வழியில்லாமல் உணவுக்குக் கூட நாம் கஷ்டப்படுகின்றோம் என்று நெடுந்தீவு மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
எனவே, இந்த விடயத்தை அரச தரப்பிடம் நான் எடுத்துரைப்பேன். இந்தியத் தரப்பிடம் எமது மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து தீர்வு காண்பதற்கான அழுத்தம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.” – என்றார்.