இரவு நேரங்களில் வாகனங்களை எவ்வாறு நிறுத்த வேண்டும்? – போக்குவரத்து பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்
இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
சாரதிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வண்ணம் ஒளியைப் பிரதிபலிக்கும் ஒளிரும் ஜாக்கெட் மற்றும் ஒளிரும் கையுறைகளை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரி அணிய வேண்டும்.
மேலும், வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின்விளக்குகளைப் பயன்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், நிலைய கட்டளைத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து நிலைய கட்டளைத் தளபதிகள் இரவுக் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இவ்வாறு செயற்படுகிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து கடமை உத்தியோகத்தர்கள் பல்வேறு வகையான மின்விளக்குகளைப் பயன்படுத்துவதால் வாகனத்தை கையாள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சில சந்தர்ப்பங்களில் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதுடன், உத்தியோகத்தர்கள் பிரதிபலிப்பு ஜாக்கெட் அணியாததால் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.