
இலங்கையில் தேனிலவு – இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் 26 வயதான பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் மற்றும் நிராகரிப்பு காரணமாக குறித்தப் பெண் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் தேனிலவுக்குச் சென்றிருந்தபோது கணவர் தனது மனைவியின் கடந்தகால உறவைப் பற்றி அறிந்த பின்னர் இந்த சம்பவம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21ஆம் திகதி பெங்களூரு திரும்பினர்.
வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
குடும்ப கௌரவம் கருதி அந்தப் பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார்.
எனினும், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணிக் மரணம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், அவரது கணவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் நாக்பூருக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், பெண்ணின் கணவர் கடந்த வெள்ளிக்கிழமை நாக்பூரில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும் அவரது தாயாரும் தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
