ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் போது இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையினை விதித்திருந்தது.
அத்துடன் பழைய முறையிலேயே விசா வழங்கும் செயன்முறையை செயற்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அந்த உத்தரவை செயற்படுத்த தவறியதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது