பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும்

நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஒரு திறமையான மற்றும் அனுபவமிக்க நபர் என்றும், அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், எனவே அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே கேட்டுக் கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் நாட்டின் ஒவ்வொரு பிரச்சினையிலும் நேரடியாக தீர்மானங்களை எடுத்த தலைவர்கள் .
ராஜபக்ச குடும்பத்தின் பெயரைப் பற்றி இவ்வளவு புலம்பாதீர்கள்.
ராஜபக்ச குடும்பம் இன்னும் இந்த நாட்டை ஆள்கிறது என்று அரசாங்க அமைச்சர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த நாற்காலிகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை, உடனடியாக அந்த நாற்காலிகளில் இருந்து இறங்குங்கள்.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சை கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைத்து விடுங்கள். ஒரு மாதத்திற்கு அதை ஒப்படைத்து விடுங்கள். அவர் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைப்பார்.
ஏனென்றால், அவர், பாதுகாப்புச் செயலாளராக இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பைத் திறமையாக உறுதி செய்த ஒரு தலைவர் .
உங்களால் முடியாவிட்டால் புலம்பாதீர்கள், கோட்டபய ராஜபக்சவிடம் ஒப்படைத்துவிடுங்கள்.” எனத் தெரிவித்தார்.