அடுத்த மாவீரர் தினத்திற்கு முன் ‘தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவியுங்கள்’

அடுத்த மாவீரர் தினத்திற்கு முன் ‘தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவியுங்கள்’

சுமார் 16 வருடங்களாக வன்னியில் இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய மாவீரர் துயிலும் இல்லக் காணியை முழுமையாக விடுவிக்கக் கோரி போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களுடன் மனு ஒன்றை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தமிழ் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் 2,500 பேர் கையொப்பமிடப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் நவம்பர் 27 அன்று இடம்பெறவுள்ள மாவீரர் தினத்திற்கு முன்னர் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்த நடவடிக்கைக்கு தலைமைத்தாங்கிய முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“கையெழுத்துப் போராட்டத்தின் ஊடாக பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை வட மாகாண ஆளுனரிடம் கையளித்துள்ளோம். தேராவில் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடம் இருந்து மீளப் பெற்றுத்தருமாறும். அந்த இடத்திலே குறைந்தளவு இராணுவத்தினரை வைத்து கள்ளு உற்பத்தி நிலையம் நடத்தப்பட்டு வருகின்றது. ஆகவே எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நினைவேந்தலை மேற்கொள்ளும் வகையில் அந்த இடத்தை எமக்கு பெற்றுத்தர வேண்டுமென ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கேட்டுக்கொள்ளும் வகையிலான மகஜரை ஆளுநரிடம் கையளித்துள்ளோம். அவர்கள் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு  எதிர்வரும் நினைவேந்தல்களை அந்த இடத்தில் சுதந்திரமாக செய்வதற்கு வழியேற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.”

1995 முதல் 2009 வரையான காலப்பகுதியில் போரில் உயிர்நீத்த எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீர, வீராங்கனைகள் அந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, தேராவில் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்காக ஜனவரி 20ஆம் திகதி வடமாகாண ஆளுநரிடம் கையளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த நிலம் தங்களுக்கு புனிதமானது என  தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜனாதிபதிக்கு அவர்கள் அறிவித்துள்ளனர்.

“எங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் விதைக்கப்பட்டுள்ள இந்த துயிலும் இல்லம் எங்களுக்கு மிகவும் புனிதமானது, அங்கு சென்று நாங்கள் வீழ்ந்த எமது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.”

இறுதி யுத்த காலத்தில் கனரக வாகனங்களால் வடக்கு கிழக்கில் உள்ள புனித துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட போது தேராவில் மாவீரர் துயிலும் இல்லமும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த இல்லமும் இதுவரை காலமும் ஆளும் அரசாங்கங்களால் பல்வேறு இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத விடயம் எனவும், இது தமக்கு பெரும் வேதனை அளிப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

“மிகப் புனிதமான இடமாகக் கருதப்படும் மயானத்தை இழிவுபடுத்துவது எங்களுக்கு மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் தருகிறது.”

போர் முடிவடைந்ததில் இருந்து இலங்கை இராணுவத்தின் 573ஆவது படையணி தேராவில் துயிலும் இல்லத்தை வலிந்து தமது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளதாகவும், 14வது இலங்கை தேசிய படையணி அங்கு சீமெந்து கல் உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

“கல்லறைகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் அது புனிதத்தை களங்கப்படுத்துவதற்குச் சமம்.”

தேராவில் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குறித்த துயிலும் இல்லத்தில் ஐந்து இராணுவத்தினரே தங்கியுள்ளதாக ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.

“அங்கு ஐந்து இராணுவத்தினர் மட்டுமே தங்கியுள்ளனர், மேலும் அவர்கள் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை.
இராணுவம் வேண்டுமென்றே அந்த நிலத்தை தங்களின் வலிந்த ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க விரும்புகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது..”

தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சட்டரீதியாக விடுவித்து, சுதந்திரமாக அங்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துமாறு மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அந்த நிலத்தை விடுவிக்கும் போது, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆண்டு முழுவதும், குறிப்பாக ‘மாவீரர் நாளன்று’ பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, தடையற்ற அணுகலை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

பிரதமர், வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மனுவின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாவீரர்களாகப் போற்றப்படும் ‘துயிலம் இல்லம்’ எனப்படும் பல மயானங்கள் அரச படைகளினால் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முகாம்களாக மாற்றப்பட்டன.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களை இராணுவம் ஆக்கிரமித்த பின்னர், சுமார் 20,400 தமிழ் போராளிகளின் புதைகுழிகள் அடங்கிய சுமார் 25 மயானங்கள் இலங்கை இராணுவத்தால் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

தமிழ் மற்றும் சைவ கலாச்சாரத்தின் ஒரு அங்கமான இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் அடிப்படை உரிமையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் உறுதியளித்துள்ளார்.

Share This