பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துவிட்டது – தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துக்கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைக் கூட்டி கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த தலைவர்கள் பன்ருட்டி இராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அணியினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
சுமார் மூன்று மணி நேரமாக நடந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துக்கொண்டது உள்ளிட்ட மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக பன்ருட்டி இராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இதன்படி, இதுநாள் வரை தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்த உரிமை மீட்புக் குழு, இப்போது அதில் இருந்து வெளியேறுகிறது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், கூட்டணி அமைப்பது குறித்து தற்போது தீர்மானிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.