மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்

இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும் எனவும், இதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயில்கள் இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் ஒரு முக்கிய கட்டமாக விளங்குகிறது. நிலையான போக்குவரத்து, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே ஹைட்ரஜன் ரயில்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவும் அந்த அணியில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹைட்ரஜன்-இயங்கும் ரயில்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த ரயில்கள், ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. இதில் கார்பன் வெளியேற்றம் இல்லை, ஏனெனில் இது வெறும் நீரையும் வெப்பத்தையும் மட்டுமே வெளியிடுகிறது. அந்த வகையில் இயற்கை நோக்கி ஒரு பெரிய முன்னேற்றமாக, ஹைட்ரஜன் ரயில்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.