அதீத பாசம் காட்டிய தந்தை – ஆத்திரத்தில் குழந்தையை கொலைசெய்த தாய்

கணவன் அதீத பாசம் காட்டியதாக கூறி ஐந்து மாத ஆண் குழந்தையை தண்ணீர் பெரலுக்குள் அமிழ்த்தி கொலைசெய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழகம் – புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில் இடம்பெற்றுள்ளது. மணிகண்டன், லாவண்யா தம்பதியினரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கணவன்-மனைவி இடையே குழந்தை பிறந்தது முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் லாவண்யா குழந்தையுடன் புலியூரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறாம் இரவு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் லாவண்யா கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்து கொண்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதாக சத்தமிட்டுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் பெரலுக்குள் மர்மமான முறையில் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் பொலிஜார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் லாவண்யா, மணிகண்டன், பொன்னருப்பு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் லாவண்யா குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் பொலிஸாரிடம் லாவண்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதில், கணவர் என் மீது அன்பாக இல்லாமல் குழந்தை மீது அதிக பாசம் காட்டி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் அமுக்கி கொலை செய்து விட்டேன்.
மேலும் ஏழு பவுன் தாலி சங்கிலியை வீட்டில் மறைத்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் நகையை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.