மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பு
எதிர்வரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
அரிசி சந்தைப்படுத்தல் சபையானது சுமார் 02 இலட்சம் மெட்றிக் தொன் அரிசியை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளதாகவும், உணவுத் திணைக்களம், ச.தொ.ச ஆகிய நிறுவனங்களில் நிலவும் நெல் களஞ்சியங்களையும் பயன்படுத்தி மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல் இலக்கை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் வாரத்தினுள் நெல் கிலோ ஒன்றின் உறுதியான விலையை அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக கூறிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர், உலர் அரிசி மற்றும் ஈர அரிசியை உரிய தரத்திற்கு ஏற்ப கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையில் ஈரநெல் உலர்த்துவதற்கு தேவையான வசதிகள் இல்லாததால் சிறு மற்றும் நடுத்தர ஆலைகளின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு ஈரநெல்லை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்தார் .