நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் விமான நிலையத்தில் கைது

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான “கொச்சிக்கடை ஷிரான்” இன் சீடராகவும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிரேண்ட்பாஸ் – மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் பேலியகொட ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொலை குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்றதற்காகவும் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், துபாயில் இருந்து அவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.