
இலங்கையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் -திடீர் வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று இலங்கையைக் கடக்கிறது.
நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று முதல் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாடு முழுவதும் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தேவையான அனைத்து எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஆபத்தான சந்தர்ப்பங்களில் குடியிருப்பாளர்களை வெளியேற்ற அவசர குழுக்கள் தயாராக உள்ளன.
அத்துடன் மண்சரிவு, மரங்கள் அல்லது கம்பங்கள் சாய்தல் போன்ற பல்வேறு அனர்த்தங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திடீர் வெள்ளம், பயிர் சேதம், மின்வெட்டு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
