பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பல இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்புக்கு வரவுள்ளதுடன், அவரை வரவேற்கும் விழா ஏப்ரல் 5 ஆம் திகதி காலை சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நாளில் பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார். இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் கூட்டறிக்கையொன்றும் வெளியிடப்படும்.
பிரதமர் மோடி, சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் பணிகளை கொழும்பிலிருந்து ஒன்லைனில் தொடங்கி வைப்பார். அதேபோன்று ஏனைய பல திட்டங்களையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.
பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் திகதி அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதிக்குச் சென்று மகாவ-அனுராதபுர பாதையில் ரயில் சமிக்ஞை அமைப்பைத் திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.