ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே – மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் அணிக்கு ஒரு சுமையாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் அவர் ஓட்டங்கள் எடுக்க தவறியிருந்தார். இந்த தொடரில் இதுவரை அவர் ஒரேயொரு அரைச் சதத்தை மட்டுமே அடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, ரிஷப் பந்த் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் கொண்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியள்ளன.
தி இந்து பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரின் கூற்றுப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ஆகியோர் ரிஷப் பந்த்தை அணிக்குள் கொண்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரிஷப் பந்த் தலைவர் பதிவியை கோரியதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தோனி ரிஷப் பந்த்தை தொடர்புகொண்டு பேசியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெகா ஏலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, சென்னை அணி இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிவுசெய்திருந்தது. பந்த்தை ஏலத்தில் வாக்குவதே அவர்களின் முடிவு என்பதை இது தெளிவுப்படுத்துகின்றது.
எவ்வாறாயினும், சென்னை அணியில் முதலில் ஒரு வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பினாலும், தலைவர் பதவியை விரும்புவதில் பந்த் பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் சென்னை அணி அந்த கோரிக்கை ஏற்கவில்லை எனவும், இறுதியில் மீதமுள்ள மூன்று வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் அவரின் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.