தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் – சபையில் ஆளும், எதிர் தரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்

தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் – சபையில் ஆளும், எதிர் தரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்

கொவிட் (COVID-19) தொற்றுநோய் பரவல் ஏற்பட்டிருந்த போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் பதிவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காஸ்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளாது கொவிட்-19 தொற்று நோயால் உயிரிழந்த மற்றும் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததுடன், அரசாங்கம் தகவல்களை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் நாட்டின் சுகாதார அதிகாரிகளுக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ரவூப் ஹக்கீம், இவ்வாறான தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, “அரசாங்கம் எந்த வகையிலும் தகவல்களை மறைக்க முயற்சிக்கவில்லை. இது தகவல்களை மறைக்கும் பிரச்சினை அல்ல. இது மருத்துவ நெறிமுறைகள் பற்றியது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ், நோயாளியின் விவரங்களை வெளியிடுவது அனுமதிக்கப்படாது. மேலும், இந்தத் தகவலை மறைக்க எங்களுக்கு உரிமை இல்லை. விஞ்ஞானப்பூர்வமான சான்றுகளின் அடிப்படையில்  குறித்த அமைச்சரவை முடிவை அப்போதைய அரசாங்கம் எடுத்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த தகவல்களை வெளியிடுவதில் சில நெறிமுறை ரீதியான பிரச்சினை இருப்பதால்தான் வெளியிட வில்லை. மாறாக மறைப்பதற்கான தேவை எமது அரசாங்கத்துக்கு இல்லை.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

இதன் போது மீண்டும் கேள்வி எழுப்பிய ரவூப் ஹக்கீம், தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களது தகவல்களை வெளிப்படுத்துவதால் எவ்வித நெறிமுறை பிரச்சினையும் ஏற்படாது.  இருப்பினும் இது ஒரு நெறிமுறை பிரச்சினை என அரசாங்கம் கூறுகிறது. அதில் என்ன நெறிமுறை பிரச்சினை உள்ளதென எமக்கு தெரியவில்லை. இது கடந்த அரசாங்கத்தின் தவறு என்பது உண்மைதான், ஆனால் இது எவ்வாறு நெறிமுறைப் பிரச்சினை என்பது எனக்குப் புரியவில்லை என்றார்.

இதேவேளை, இந்த தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு தகவலையும் மறைக்க விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்திய அமைச்சர் நளிர்ந்த ஜயதிஸ்ஸ, விவரங்களை வெளியிடுவது குறித்து சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியதுடன், இத்தீர்மானம் குறித்து ஒரு நாடாக நாம் வெட்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த அரசாங்கத்தின் தீர்மானம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய அநீதி இழைக்க வழிவகுத்ததாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கருத்துகளை மாறி மாறி முன்வைத்தனர்.

சுகாதாரத் திணைக்களத்திற்குள் உத்தியோகபூர்வ விசாரணைகளை இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டும் என ரவூப் ஹக்கீம் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துடன்,  கொவிட்-19 தகனங்கள் குறித்து ஆலோசித்த குழுவின் ஒரு பகுதியாக இருந்த சில அதிகாரிகள் இப்போதும் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான், சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் ஜயசிங்கவே அப்போதும் அமைச்சின் செயலாளராக பணியாற்றினார். இந்த தீர்மானத்தை எடுத்த குழுவின் முக்கிய உறுப்பினராக அவர் இருக்கிறார். அவரை எவ்வாறு மீண்டும் இந்த பதவிக்கு நியமிக்க முடியும் என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தீர்மானத்தை எடுத்து யாரென தெரியும். அதிகாரிகள் கருத்துகள் எதனையும் அவர்கள் உள்வாங்காது எவ்வித விஞ்ஞானப்பூர்வமான தரவுகளும் இன்றியே குறித்த தீர்மானத்தை எடுத்தனர் என்றார்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்ட ரவூப் ஹக்கீம், குறைந்தது துறை ரீதியான விசாரணையாவது நடத்துங்கள். அந்த நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக அரசாங்கத்தின் சார்பில் பதில் அளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஓர் இனத்தை இலக்குவைத்து நடத்த இந்த குரோதச் செயல் குறித்து நாம் வெட்கமடைய வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் குறித்த தகவல்களை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் பதில் அளித்துள்ளார். தகனம் செய்யப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதால் அவர்களது கவலைக்கு தீர்வு கிடைக்காதென நினைக்கிறோம். அவ்வாறு வழங்க வேண்டும் என கோரினால் அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.” என்றார்.

Share This