
சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது!
வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெருமதி 15 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பைச் சேர்ந்த திருமணமான தம்பதிகளான இந்த சந்தேக நபர்கள், அதிகாலை 2.30 மணியளவில் எதிஹாட் ஏர்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
39 வயதான கணவர் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரது மனைவிக்கு 29 வயது என்றும் கூறப்படுகிறது.
தம்பதியரிடம் 500 அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட சுமார் 100,000 வெளிநாட்டுத் தயாரிப்பு “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய ஆறு சூட்கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர், ஜனவரி 14 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
