நல்லூர் ஆலய வளாகத்தில் இராணுவ வாகனம் நுழைந்தமையால் பரபரப்பு

நல்லூர் ஆலய வளாகத்தில் இராணுவ வாகனம் நுழைந்தமையால் பரபரப்பு

நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

ஆலய மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு, நேற்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வரையில் நல்லூர் ஆலய சுற்று வீதி வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாகவே வாகனங்கள் செல்ல பணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடியேற்ற திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, ஆலய சுற்று வீதிகளில் உள்ள வீதி தடைகளை தாண்டி இராணுவத்தினர் கப் ரக வாகனத்தில் ஆலய முன் வீதி வரையில் பிரவேசித்துள்ளனர்.

வீதி தடைகளில், பொலிஸார், யாழ் . மாநகர சபை உத்தியோகஸ்தர்கள், தனியார் பாதுகாப்பு சேவை உத்தியோகஸ்தர்கள் என்போர் கடமையில் இருக்கும் போது, அவர்களின் அறிவுறுத்தல்களையும் மீறி இராணுவத்தினர் அடாத்தாக ஆலய வீதிக்குள் உட்பிரவேசித்தமை ஆலயத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு இடையில் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.

Share This