மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் மீளவும் ஆரம்பித்து வைப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் மீளவும் ஆரம்பித்து வைப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியின் கட்டுமானம் 2022 நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

கட்டுமானத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான யுவான் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37 கிலோமீற்றர் ஆகும்.

168.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.

முதல் கட்டம் கடவத்தை முதல் மீரிகம வரை 37 கிலோமீற்றர் நீளமும், இரண்டாவது கட்டம் மீரிகம முதல் குருணாகல் வரை 39.7 கிலோமீற்றர் நீளமும், மீரிகம முதல் அம்பேபுஸ்ஸ வரை ஒன்பது தசம் ஒரு கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மூன்றாவது கட்டம் பொத்துஹெர முதல் கலகெதர வரை 32.5 கிலோமீற்றர் நீளமும், நான்காவது கட்டம் குருணாகலிலிருந்து தம்புள்ள வரை 60.3 கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது கட்டமான மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This