மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2025 ஒக்டோபர் தொடக்கத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் பெறுவதற்கான அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க, மகிந்த ராஜபக்ச தனது குண்டு துளைக்காத வாகனத்தை திருப்பித் தந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் வாகனங்களைத் திருப்பித் தருமாறு கோரியதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன வாய்மொழியாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கோரிக்கைகள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் போன்ற மூத்த அதிகாரிகள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

“வாகனங்களை மீளப் பெற்றமை அவர்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் பாதித்தால், வாகனங்களை அவர்களுக்கு மீள கையளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

குழுவின் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால், அத்தகைய வாகனங்களை மீள அவர்களுக்கு கையளிப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This