ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை
அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்கூட்டியே வரியற்ற வாகன இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச வாகனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செலவுகளைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கு அதிசொகுசு வாகனங்களை வழங்குவதில்லை என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்திடம் போதுமான சொகுசு வாகனங்கள் இருந்தாலும், கொள்கையின்படி அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால டெய்லி மிரர் செய்திக்கு தெரிவித்தார்.
சொகுசு வாகனங்கள் குறித்து தற்போது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பின்னர் அவை ஏலம் விடப்படும் என்றும் அவர் கூறினார்.