காலநிலை நெருக்கடியால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு – விஞ்ஞானிகள் தகவல்

உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காலநிலை நெருக்கடியே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 2022 ஆம் ஆண்டு முதல் தீவிர காலநிலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பல உணவுப் பொருட்கள் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுகளில் தென் கொரிய முட்டைக்கோஸ், அவுஸ்திரேலிய கீரை, ஜப்பானிய அரிசி, பிரேசிலிய கோபி மற்றும் கானா கொக்கோ ஆகியவை அடங்கும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில், கானா மற்றும் ஐவரி கோஸ்ட்டில் ஏற்பட்ட வெப்ப அலையைத் தொடர்ந்து ஏப்ரல் 2024 இல் உலகளாவிய கொக்கோ விலையில் 280 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 2022 இல் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் கீரை விலையில் 300 சதவீதம் உயர்வு கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வெப்ப அலைகளுக்குப் பின்னர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியாவில் முட்டைக்கோஸ் விலையில் 70 சதவீத அதிகரிப்பு மற்றும் ஜப்பானில் அரிசி விலை 48 சதவீத அதிகரிப்பு மற்றும் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் உருளைக்கிழங்கு விலை 81 சதவீத அதிகரிப்பு ஆகியவை அடங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட வறட்சி அதற்கு அடுத்த ஆண்டு உலகளாவிய கோப்பி விலையில் 55 சதவீதம் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உணவு விலைகள் 40 சதவீதம் அதிகரிப்பதற்கு முன்னர் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட 2022 வறட்சி முக்கிய காரணியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து ஆறு ஐரோப்பிய ஆராய்ச்சி அமைப்புகளால் இந்த ஆராய்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி முதல் ஜூலை 29ஆம் திகதி வரை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.