
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீன நிறுவனம் தீர்மானம்
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளே இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபைக்கு (BOI) எழுத்துப்பூர்வமாக அறிவித்த நிறுவனம், தொழில்நுட்ப நிறுவனங்களின் அனுமதி கிடைத்திருந்த போதிலும், சமூக வலைதளங்களில் பரவிய முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபை கட்டுமானப் பணிகளை நிறுத்தியமை உள்ளிட்ட பல காரணங்களினால் இத்திட்டத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களைக் கொண்ட கூட்டமைப்பின் மூலம் 2022 ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
திட்டத்தின் மொத்த முதலீட்டுப் பெறுமதி 12.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும், இதில் 3.5 மில்லியன் டாலர்கள் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இந்தத் திட்டம் ‘கட்டுமானம், இயக்குதல் மற்றும் கைமாற்றுதல்’ (BOT) அடிப்படையில் செயல்படுத்தப்படவிருந்ததுடன், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட கட்டமைப்பை இலவசமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.
இதற்குத் தேவையான அமைச்சரவை அனுமதி, நகர அபிவிருத்தி அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் அனுமதியும் பெறப்பட்டிருந்ததாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
திட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் நிறுவனம், சூறாவளிக்குப் பின்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடத்திய சோதனையில் நிலத்தின் உறுதித்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அரசாங்க அதிகாரிகளின் தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மத்தியில் இத்திட்டத்தை வணிக ரீதியாக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் Amber Adventures நிறுவனம், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய சர்வதேச சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராகி வருகிறது.
முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதில் முதலீட்டுச் சபை தவறியமை ஒரு பாரதூரமான ஒழுங்குமுறை தோல்வி என்றும், இத்தகைய எதிர்பாராத சூழலில் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவிய பொருளாதார ஸ்திரமற்றத்தன்மை மற்றும் கொள்கை முரண்பாடுகள் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறிய முக்கிய சர்வதேச நிறுவனங்களின் பட்டியலில் தற்போது Amber Adventures நிறுவனமும் இணைந்துள்ளது.
இதற்கு முன்னதாக, இலங்கையில் 60 ஆண்டுகள் செயற்பட்ட ஜப்பானின் Mitsubishi நிறுவனம், பிரான்சின் Decathlon விளையாட்டு உபகரண நிறுவனம், இந்தியாவின் Zomato சேவை மற்றும் சர்ச்சைக்குரிய காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகிய Adani குழுமம் ஆகியன இலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தன.
இந்த புதிய வெளியேற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் முதலீட்டுப் பாதுகாப்பு குறித்த எதிர்மறையான செய்தியை வழங்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
