ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி

ஆந்திர மாநில தலைநகருக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் திகதி இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது.
அப்போது ஹைதராபாத் தெலங்கானாவின் தலைநகராக இருக்கும் என்றும், புதிய தலைநகரை உருவாக்கும் வரை அல்லது 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவின் தலைநகராகவும் ஹைதராபாத் இருக்கும் என்றும் மாநில பிரிவினை மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
இருந்தாலும், மாநிலம் பிரிந்த பின்னர் ஆந்திராவின் முதல்வரான சந்திரபாபு நாயுடு, குண்டூர்-விஜயவாடா இடையே அமராவதியை தலைநகரமாக அறிவித்தார். இதற்காக அப்பகுதி விவசாயிகள் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தாமாகவே முன் வந்து வழங்கினர். 2014 முதல் 2019 வரை அமராவதியில் சட்டப்பேரவை, தலைமை செயலகம் போன்றவை கட்டப்பட்டு, அங்கேயே ஆட்சியும் நடந்தது.
ஆனால், 2019-ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். இதையடுத்து, அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகமும் இருக்கும்படி மூன்று தலைநகர கொள்கையை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை தொடர்ந்து 2024-ல் ஆந்திராவில் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானார். மீண்டும் அமராவதியே தலைநகராக இருக்கும் என சந்திரபாபு நாயுடு அறிவித்ததோடு, அதனை மீண்டும் உயிர்ப்பிக்க மத்திய அரசிடம் நிதி உதவியும் கேட்டார்.
ஏற்கெனவே மாநில பிரிவினை மசோதாவில் ஆந்திராவின் தலைநகரை நிர்மாணிக்க மத்திய அரசு நிதி உதவி செய்யும் என கூறியிருப்பதால், மத்திய அரசும் நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டது.
தற்போது அமராவதியில் கட்டுமானப் பணிகள் கிடுகிடுவென நடந்து வருகின்றன. மேலும், ஆந்திர அரசுக்கு தேவையான அரசு கட்டிடங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என அமராவதியை ஒரு நவீன தலைநகரமாக சந்திரபாபு நாயுடு உருவாக்கி வருகிறார். இந்நிலையில், ஆந்திராவுக்கு ரூ.4,285 கோடி நிதி உதவியை மத்திய அரசு நேற்று வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.