பேருந்து கட்டணக் குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது

பேருந்து கட்டணக் குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது

இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த பேருந்து கட்டணங்களில் 2.5 வீத குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) அறிவித்துள்ளது.

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதனை காரணம் காட்டி பேருந்து கட்டணங்களில் 2.5 வீத குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) அறிவித்துள்ளது.

“முன்னர் அறிவிக்கப்பட்ட 2.5 வீத கட்டணக் குறைப்பு இன்று செயல்படுத்தப்படாது.

எரிபொருள் விலை மாற்றங்களின் தாக்கத்தை மதிப்பாய்வு செய்த பிறகு, திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பு இன்று பிற்பகுதியில் அறிவிக்கப்படும்” என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனிடையே, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை ஏழு ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா), எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

Share This