சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை – நாமல் எம்.பி ஆதங்கம்

வெளிநாட்டு சக்திகள் இலக்கு வைக்கும் முன்னாள் இராணுவ தளபதிளை அரசாங்கம் பாதுகாக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா நேற்று தடை விதித்துள்ளது.
இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் “எங்கள் போர் வீரர்களை நாங்கள் என்றென்றும் பாதுகாப்போம் எனவும், அவர்களின் மரபை யாரும் குறைமதிப்பிற்கு உட்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பயங்கரவாதத்தை முற்றிலுமாக தோற்கடித்த முதல் நாடு இலங்கை, ஆனால் மேற்குலகம் நமது போர் வீரர்களை தொடர்ந்தும் குறிவைத்து வருகிறது, அதே நேரத்தில் விடுதலைப் புலிகளின் கொடூரத்திற்கு நிதியளித்து நியாயப்படுத்தியவர்களை புறக்கணிக்கிறது.
பிரித்தானிய அரசாங்கம் நேற்று வித்துள்ள தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாகும்.
இது நீதி அல்ல என்றும், மாறாக சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி சலுகைகளை அனுபவிப்பதன் மூலம் நமது தேசத்தின் நல்லிணக்கத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடுமையான முடிவுகளின் மூலம் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச கூறினார்.
இந்தத் தடைகள் நமது துருப்புக்களின் மன உறுதியைக் குறைக்கும் என்றும், இதுபோன்ற மற்றொரு நெருக்கடி ஏற்பட்டால், துருப்புக்களுக்குப் போராட தைரியம் இல்லாமல் போகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நாமல் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
இங்கு, சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க சலுகைகளை நாடும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் சமூகம் இரையாக வேண்டாம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
போர் பயங்கரவாதத்திற்கு எதிரானது, அது எந்த இனக்குழுவிற்கும் எதிரானது அல்ல. நமது இராணுவத்தின் தியாகங்களை எப்போதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியவர்களின் ஆதரவுடன் உங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இந்நிலையில், இலங்கைக்கு அமைதியை நிலைநாட்டியவர்களை வெளிநாட்டு சக்திகள் குறிவைக்கும் போது அவர்களைப் பாதுகாப்பீர்களா, அல்லது அமைதியாக இருப்பீர்களா? எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.