இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்றன.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இதன்படி, மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொர்பான ஒப்பந்தம் என்பன பரிமாறப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் மாலைதீவு மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகளிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றங்களைக் கையாள்வதில் பரஸ்பர சட்ட உதவி வழங்குவதை முதலாவது ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டாவது ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையில் இராஜதந்திர பயிற்சி அளிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே தகவல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தங்களை மாலைதீவு சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் மற்றும் இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு ஆகியோர் மாலைதீவுக்கான அரச விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில் தனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக மாலைதீவு ஜனாதிபதி முய்சுவுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.
அதேபோன்று , இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்தும் மாலைதீவு ஜனாதிபதியிடம் விளக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அந்த ஒத்துழைப்பை தொடர் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் வசதியான நாளில் இலங்கைக்கு வருமாறும் மொஹமட் முய்சுவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.