“சிறந்த பட்ஜெட்“ – நாட்டிற்கு நன்மை பயக்கும்

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சிலர் இதை ஐ.எம்.எப.(IMF) வரவு – செலவுத் திட்டம் என்று அழைக்கிறார்கள்,. ஆனால் இது அப்படியானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (18) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இலக்குகளைப் பார்க்கும்போது, இந்த முறை நாம் அவற்றை அடையும் அதிக நம்பிக்கையுடன் இருக்க முடியும். எதிர்பார்க்கப்படும் வருவாய் இலக்கு ரூ.5 டிரில்லியனாகும்.
அரசாங்கப் பத்திரங்கள் மீதான குறுகிய கால அழுத்தங்களை கருத்திற்கொண்டு செயல்படுவது முக்கியம். எமது பணவியல் கொள்கைக்கு ஏற்ப நிலையான வட்டி விகிதங்களை பராமரிக்க உதவும்.
பல ஆண்டுகளாக ஐஎம்எப் உடனான கலந்துரையாடல்களில் பங்கேற்ற ஒருவர் என்ற வகையில், இந்த முறை ஒரு நாடாக ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி சரியான பாதையில் செல்ல வெளிப்புற பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மாறவில்லை என்பதை என்னால் கூற முடியும்.
நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பொருளாதாரக் கொள்கைகளின் திசை மாறவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கருத்துப்படி, அது அவசியம். சர்வதேச நாணய நிதியத்தின் ஒட்டுமொத்த பேரியல் பொருளாதார நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களுக்குள் செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால், இதை ஒரு நேர்மறையான அறிகுறியாக நான் பார்க்கிறேன்.
இது ஐ.எம்.எப் பட்ஜெட் அல்ல. ஆனால் நாட்டிற்கு இது ஒரு நல்ல பட்ஜெட்.” எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறினார்.