
‘மொரட்டுவெல்ல பட்டி’ என்பவரின் மாமியாருக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம்!
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சௌமியா பெர்னாண்டோ எனப்படும் ‘மொரட்டுவெல்ல பட்டி’ என்பவரின் மாமியாருக்குச் சொந்தமான, சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பாணந்துறை – சிந்தவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு காணி மற்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆடம்பர வீடு என்பன இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை மறைக்கும் நோக்கில், தனது கணவரின் தாயார் (மாமியார்) பெயரில் இந்தப் பெறுமதியான சொத்துக்களை சௌமியா பெர்னாண்டோ கொள்வனவு செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்ச இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.
யுக்திய (நீதி) நடவடிக்கையின் ஒரு அங்கமாக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினரின் சட்டவிரோத சொத்துக்களைக் கண்டறிந்து முடக்கும் செயற்பாடுகளைப் பொலிஸார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சொத்து முடக்கம் குறித்த மேலதிக அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
