
“கிரிமினல்களிடம் இருந்து அமெரிக்கா அதிகாரத்தை பறிக்கும்’’ – ஜே.டி.வான்ஸ்
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்ற நிலையில், குற்றவியல் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தை அமெரிக்கா பறிக்கும் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஜே.டி. வான்ஸ், ‘‘அமைதியை நிலைநாட்டுவதற்கான வழிகளில் ஒன்று, அமெரிக்கா அதைச் செய்யும் என்பதை தெளிவுபடுத்துவது. இதன்மூலம் அமெரிக்கா மதிக்கப்படும். குற்றவியல் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தை அமெரிக்கா பறிக்கும் என்பதை தெளிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம். அத்தகைய கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து, அதை சட்டப்பூர்வ அரசாங்கங்களுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.
குற்றவியல் கும்பல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதிகாரத்தை நிலைநாட்டுவது மற்றும் சட்டப்பூர்வமான அரசாங்கங்களை வலுப்படுத்துவது ஆகியவற்றில்தான் அமைதி உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
வெனிசுலா தலைநகர் கராகசில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம், அதிரடியாக கைது செய்து தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றதை அடுத்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ‘‘போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் உள்ள நிலப்பரப்பின் மீது நாங்கள் தாக்குதல் நடத்தப் போகிறோம். போதைப்பொருள் கும்பல்தான் மெக்ஸிகோவை ஆள்கின்றன.” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்ரம்ப்பின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஜே.டி. வேன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை, வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை கைது செய்தது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றம் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டி இருந்தார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தையும் அந்த நாட்டையும் அமெரிக்கா தற்காலிகமாக நிர்வகிக்கும் என்று ட்ரம்ப் அறிவித்தார். அந்த நாடு 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவுக்கு வழங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா, பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் வேறொரு நாடு தலையிடுவதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் என்று மெக்ஸிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் கூறி இருந்தார்.
