
குவாட் நாடுகளின் தூதுவர்கள் சீனாவில் மந்திராலோசனை
சீனாவிலுள்ள குவாட் நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டணியானது சீனாவுக்கு எதிரான அமைப்பாக கருதப்படுகின்றது.
குவாட் கூட்டணி தொடர்பில் சீனா தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டுவருகின்றது.
அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக வரிகள் காரணமாக, இந்த அமைப்பின் கூட்டங்கள் நடைபெறவில்லை.
இந்நிலையில், சீனாவுக்கான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர்கள், சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பேச்சு நடத்தியுள்ளனர்.
வழக்கமாக இது போன்ற சந்திப்புகள் குறித்து வெளிப்படையான அறிக்கை எதுவும் வெளியிடப்படாது. ஆனால், சீனாவுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் பெர்டியூ, சமூக வலைதள பக்கத்தில், இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘இந்தோ – பசிபிக் பகுதியை சுதந்திரமாக வைத்திருக்க குவாட் செயல்பாடு உதவும். நான்கு நாடுகளின் உறவு தொடர்ந்து உறுதியாகவும், வலுவாகவும் உள்ளது’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
