ரஷீதின் சுழலில் சுருண்டது சிம்பாப்வே; தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றுப் போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி கொண்டிருக்க தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 2-1 என தொடரை தனதாக்கி அசத்தியது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு இருபது மற்றும் மூன்று ஒருநாள் ஆகிய போட்டித் தொடரில் முதலில் ஆரம்பித்த இருப்பதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றதுடன், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை சவாலாக்கியிருந்தது.
இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நேற்று (14) இடம்பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சிம்பாப்வே அணிக்கு கொடுத்திருந்தது.
இதற்கமைய களமிறங்கிய சிம்பாப்வே அணிக்கு நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர்களான ரஷீட்கான் இடையூறு கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளிச் சுருட்ட 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த சிம்பாப்வே அணி 127 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பேனட் 31 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பின்னர் 128 என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்மதுல்லாஹ் ஒமர்ஷாய் பொறுப்புடன் ஆடி 34 ஓட்டங்களையும், அனுபவமிக்க வீரரான முஹம்மது நபி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 19.3 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுவெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
சிம்பாப்வே அணி சார்பில் பந்துவீச்சில் சிக்கந்தர் ராசா மற்றும் முஷாரபானி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)