மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர், விஷால். இவர், கடந்த சில நாட்களாகவே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில் முன்பு இருந்தது போல் இல்லாமல் சோர்வுடன் காணப்படுகிறார்.
அப்படித்தான், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் மயங்கி விழுந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடல் நிலை சரியில்லாத விஷால்?
20 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருபவர், விஷால். திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.ரெட்டியின் மகனான இவர், ஆரம்பத்தில் சில படங்களில் துணை இயக்குநராக வேலை பார்த்தார்.
பின்பு, செல்லமே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு கொஞ்சம் தள்ளியிருக்க ஆரம்பித்தார்.
விஷால், 12 வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நிதிப்பிரச்சனை காரணமாக வெளிவராமல் இருந்தது. அந்த பிரச்சனைகள் தீர்ந்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
இந்த படத்தின் விழாவில் கை நடுக்கத்துடன் விஷால் பேசியது, ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
அவ்விழாவிற்கு அவர் அதிக காய்ச்சலுடன் வந்திருப்பதால், அவருக்கு கை உதறியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தான் பங்கேற்று வந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் தான் நலமுடன் இருப்பதாகவே கூறினார்.
மயங்கி விழுந்தார்…
விஷால், சினிமாவை தாண்டி பல சமூக நலப்பணிகளையும் செய்து வருகிறார். வறுமை கோட்டில் இருக்கும் மாணவர்களுக்கு படிப்பு செலவுக்காக உதவுவது, விவசாயிகளுக்கு பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்.
இது சம்பந்தமாக நடக்கும் விழாக்களிலும் கலந்து கொள்வார். அப்படி, கூவாகத்தில் மிஸ் திருநங்கை 2025 போட்டி நடைப்பெற்றது. இந்த விழாவில் நேற்று விஷால் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டார்.
இதில் தமிழ்நாடு மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த திருநங்கைகளும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அனைவரும் கூடியிருந்த நேரத்தில், சிரித்து பேசிக்கொண்டிருந்த விஷால் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
விஷால் மயக்கமடைந்ததை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அவ்விழாவில் மற்றொரு சிறப்பு விருந்தினராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரை உடனிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ சிகிச்சிக்கு பிறகு, விஷால் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னர் போல் இல்லை..
கோலிவுட்டில் அனைத்து நடிகர்களும் ஃபிட் ஆக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும்தான் உடற்கட்டுடன் இருப்பர். அப்படி, தனது உடலை மிடுக்காக வைத்திருந்தவர் விஷால். ஆனால், எந்த காரணத்தாலோ அவரது பேச்சிலும் நடையிலும் கடந்த சில வருடங்களாக தடுமாற்றம் தெரிகிறது.
முன்னர் வெளிவந்த படங்களில் அனைவரையும் பரந்து பரந்து அடித்து-சண்டை போட்ட அவர், இப்போது அந்த அளவிற்கு ஆக்டிவாக இல்லை. இதனால், இவரது நிலை குறித்து ரசிகர்கள் கவலைக்குள்ளாகி இருக்கின்றனர்.
ZeeNews Tamil