சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
82,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் ஊழல், சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
எந்தவொரு அதிகாரியின் இதுபோன்ற செயல்களுக்கு இடமளிக்க முடியாது என்று வலியுறுத்திய அவர், ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் பொலிஸ் அதிகாரிகளை தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
புதிய பொலிஸ்மா அதிபரின் முக்கிய நோக்கம் பொதுமக்களுக்கு நம்பகமான பொலிஸ் சேவையை உருவாக்குவதாகும் என்றும் ஊழல் அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக அனைத்து பணியாளர் தர அதிகாரிகளும் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.