கொழும்பு – பொரளையில் நடந்த கோர விபத்து!!! ஓட்டுநர் தொடர்பில் வெளியான தகவல்

பொரளை – கனத்த சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட கிரேன் ஓட்டுநர் கஞ்சா போதைப் பொருள் உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பொரளை சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (28) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் போக்குவரத்து சமிக்ஞையில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், காயமடைந்தவர்களில் அதுருகிரியவைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் அடங்குவர். விபத்துக்கு பிரேக் செயலிழந்தமையே காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.