இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது
15 மாதப் போருக்குப் பிறகு காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக கத்தார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பின்னர் இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் “காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவரவும், பாலஸ்தீன பொதுமக்களுக்கு மிகவும் தேவையான மனிதாபிமான உதவியை அதிகரிக்கவும், பணயக்கைதிகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கவும் முடியும்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒப்பந்தத்தின் இறுதி விவரங்கள் இன்னும் ஆராயப்பட்டு வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ள அதேவேளை, ஒப்பந்தத்தை “ஊக்குவித்ததற்காக” பைடனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பல பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்களும் கொண்டாடினர், ஆனால் காசாவில் தரையில் நடந்த போரில் எந்த தளர்வும் இல்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கத்தார் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா நகரத்தின் ஷேக் ரத்வான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 12 பேர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட ஹமாஸை அழிக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அன்றிலிருந்து காசாவில் 46,700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது, மேலும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் கடுமையான பற்றாக்குறை உள்ளது.
பணயக்கைதிகளில் 94 பேர் இன்னும் ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 34 பேர் இறந்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போருக்கு முன்பு கடத்தப்பட்ட நான்கு இஸ்ரேலியர்கள் உள்ளனர், அவர்களில் இருவர் இறந்துவிட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் ஆறு வார கட்டம் தொடங்குவதற்கு முன்பு, இரு தரப்பினரும் “அமைதியாக” இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இதன் மூலம், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மாற்றப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காசாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறும், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் மனிதாபிமான உதவிகளுடன் வரும் நூற்றுக்கணக்கான லொரிகள் ஒவ்வொரு நாளும் பிரதேசத்திற்குள் அனுமதிக்கப்படும்.
மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், இஸ்ரேலிய துருப்புக்கள் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் மற்றும் “நிலையான அமைதிக்கு” திரும்ப வேண்டும் என்ற இரண்டாவது கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் 16 வது நாளில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.