டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை

இந்தியாவின் புடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. 19 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடெல்லியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான
கேஜ்ரிவால் பின்னடைவுக்குப் பின்னர் சற்று முன்னிலை வகிக்கிறார்.

ஆனால், கல்காஜியில் களம் கண்ட முதல்வர் அதிஷி, ஜாங்புராவில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர் சிசோடியா
ஆகியோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் களம் கண்டார். இத்தொகுதியில் பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா,
காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்‌ஷித் போட்டியிட்டனர்.

கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷிக்கு எதிராக அல்காலம்பா (காங்கிரஸ்), ரமேஷ் பிதுரி (பாஜக) போட்டியிட்டார்.
ஜாங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தி தொகுதியில் சத்யேந்தர் ஜெயின் போட்டியிட்டார்.

டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த ஐந்தாம் திகதி ஒரே கட்டமாக
தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது

70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர். தற்போதைய நிலவரப்படி பாஜக 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது.

Share This