க்ரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
மதுரை, சோழவந்தான் தென்கரை பாலம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை க்ரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவற்றை சிலர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன்படி பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் பத்து பேருடன் சேர்ந்து குறித்த ஹோட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்திலேயே பத்து பேருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த ஹோட்டலில் சிக்கன் வாங்கி உண்ட 12 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அதன்படி சுமார் 22 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி ஹோட்டலில் ஆய்வு நடத்திய சுகாதாரத் துறையினரால் பொலித்தீன் பயன்பாடு, சுகாதார குறைபாடு போன்றவற்றின் காரணமாக அந்த ஹோட்டலுக்கு ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஹோட்டலில் ஒன்பது வகையான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் வீடு திரும்பினர்.