பாட் கம்மின்ஸ் விலகல் – அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தும் பொறுப்பு யாருக்கு?
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் தனது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக தற்போது அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் மோதும் சம்பியன்ஸ் டிராபி தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் பாட் கம்மின்ஸின் காயம் அவுஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டு வரும் நிலையில் காயத்தால் விலகியிருக்கும் மற்றுமொரு முன்னணி பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட்டும் அணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியாளர் மெக் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
பார்டர் – கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய கம்மின்ஸ் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அணி வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தும் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்துக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.