மத்திய கிழக்கில் இருந்து அநுர எதிர்பார்ப்பது என்ன? ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு செல்ல திட்டமா?

மத்திய கிழக்கில் இருந்து அநுர எதிர்பார்ப்பது என்ன? ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு செல்ல திட்டமா?

(சுப்ரமணியம் நிஷாந்தன்)

ஜனாதிபதி அநுரகுமார குமார திசாநாயக்க உள்நாட்டில் எரிபொருள் விலைகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

என்றாலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருளை கையாளும் அரச நிறுவனங்களின் கடன் சுமைகளால் கடந்த அரசாங்கத்தின் போக்கிலேயே அநுரகுமார திசாநாயக்கவும் பயணிக்க வேண்டியுள்ளது.

விலை சூத்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை போன்று பாரிய அளவில் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கத்தால் முடியாதுள்ளது.

இந்த நிலையில் இடை தரகர்களின்றி எரிபொருளை நேரடியாக அரசாங்கமே கொள்வனவு செய்து உள்நாட்டில் எரிபொருள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சிகளில் அநுர ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சியின் ஒருபகுதியாகவே மத்திய கிழக்கில் சில நாடுகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி நடுபகுதியில் அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுர திட்டமிட்டுள்ளார்.

எந்த எந்த நாடுகளுக்கு அநுர செல்ல உள்ளார் என அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. ஆனால், அவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானுக்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பயணத்துக்கான ஒழுங்குகள் இடம்பெற்று வருகின்றன.

மேற்கத்திய நாடொன்றில் வசிக்கும் இலங்கை பேராசிரியர் ஒருவர் ஜனாதிபதியின் இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை குறித்த நாடுகளுடன் கலந்துரையாடி மேற்கொண் வருவதாகவும் குறித்த பேராசிரியர் மத்திய கிழக்கு நாடுகளுடன் சிறப்பான உறவை பேணி வருவதாகவும் அறிய முடிந்தது.

ஜனாதிபதியின் இந்தப் பயணம் வெற்றியளித்தால் உள்நாட்டில் எரிபொருள் விலைகளில் சில மாற்றங்கள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This