லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளில் சிக்கல்நிலை- நீதி கிடைப்பது உறுதி
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதீன் கொலைகள் இடம்பெற்று நீண்ட நாட்கள் கடந்துள்ளதால் குறித்த கொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளும் போது புலனாய்வாளர்கள் சிரமங்களை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதான சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு முக்கிய சாட்சி உயிரிழந்து விட்டதாகவும், தாஜுதீனின் கொலையை விசாரித்த தடயவியல் மருத்துவரும் உயிரிழந்து விட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த சூழ்நிலைகள் விசாரணைக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. எனினும், நீதி நிலைநாட்டப்படும் என்று அவர் வலியுறுத்தினார் .