அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம்

அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம்

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்காடுகள் எழுந்தன.

64 நாட்களாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தும் தமக்கான நேரத்தை ஒதுக்கீடு செய்துதர ஆளுங்கட்சி நடவடிக்கையெடுக்கவில்லை என அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், தம்மீது கடந்த இரண்டு மாதத்தில் 24 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.

அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் எவ்வித ஆதரவையும் வழங்கப்போவதில்லை என கூறிய அர்ச்சுனா எம்.பி, ஜே.வி.பி ஒர மனித படுகொலையை செய்த கட்சி என்றும் குற்றம் சுமத்தினார்.

எதிர்காலத்தில் நாம் எதிர்க்கட்சியில் இருந்தே தமது கருத்துகளை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.

ஆளுங்கட்சி சார்பில் இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அர்ச்சுனா எம்.பிக்கான பேச்சு உரிமை மறுக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஆளுங்கட்சியின் பணி அல்ல. எதிர்க்கட்சியின் பணியாகும். அவருக்கான நேரத்தை ஒதுக்கீடு செய்துகொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அத்துடன், அவர் மீது அரசாங்கம் எவ்வித வழக்குகளையும் பதிவுசெய்யவில்லை. அது அவரது தனிப்பட்ட விவகாரம் அதனை அவர் நீதிமன்றில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது குறிப்பிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் தொடர்பில் சபாநாயகரிடம் அறிக்கை கோரியுள்ளோம். அதுதொடர்பில் இன்னமும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. தற்போது அர்ச்சுனா எம்.பி எதிர்க்கட்சியில் பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். அவருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்றார்.

Share This