பதவி விலகியவுடன் சொந்த வீட்டிற்கு சென்றதற்காக ரணிலுக்கு நன்றி கூறிய அநுர
பதவிக்காலம் முடிவடைந்ததும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தாமல் தனது சொந்த வீட்டிற்கு சென்றதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில், தற்போது மூன்று பேர் மாத்திரமே அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பிரதான ஊடகமொன்றின் அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஹேமா பிரேமதாச ஒரு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோதிலும், இந்த பிரச்சினை பகிரங்கமானபோது அவர் வீட்டை ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைத்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
தற்போது முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மாத்திரமே உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனக்கு உத்தியோகபூர்வ இல்லம் அல்லது பாதுகாப்புப் பணியாளர்கள் தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.