சரிவடைந்து வரும் கோழி இறைச்சி விற்பனை
மக்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால், கோழி இறைச்சியின் தினசரி விற்பனை 100 மெட்ரிக் தொன் குறைவடைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்தார்.
வழக்கமாக ஒரு நாளைக்கு 600 மெட்ரிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்போது தினசரி கோழி இறைச்சி விற்பனை 500 மெட்ரிக் தொன்னாகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோழி இறைச்சிக்கான கேள்வி குறைந்து வருவதால், ஒரு கிலோ உறைந்த கோழி இறைச்சியின் (தோலுடன்) விலை 800 ரூபாயாகக் குறைந்துள்ளது.
ஒரு முட்டையின் விலை 30 முதல் 33 ரூபாய் வரை குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் குறைந்துள்ளதால், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தங்கள் உற்பத்திச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய 750 ரூபாய் செலவாகும் என்றும், ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 34 ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறினார்.
கோழிப் பண்ணைகளின் உற்பத்திச் செலவில் 75 வீதம் கால்நடைத் தீவனத்திற்கே செலவிடப்படுவதாகவும், கால்நடைத் தீவனத்திற்கு 20 வீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு வரியாக ஒரு முட்டைக்கு 6 ரூபாய் மற்றும் ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 220 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர தெரிவித்தார்.