சீரற்ற வானிலையால் சுமார் 20,000 பேர் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 57 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,300 ஆக பதிவாகியுள்ளது.
6,785 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன . பொலன்னறுவை வெலிகந்த மற்றும் பதுளை மாவட்டத்தில் இரு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
மேலும், 22 பாதுகாப்பு முகாம்களில் 1,165 பேர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களின் தலைமையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.