இலங்கை வரும் அவுஸ்திரேலியா அணி – ஒருநாள் போட்டிகளில் திடீர் மாற்றம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் திட்டமிடப்பட்டிருந்த ஒரேயொரு ஒருநாள் போட்டி இரண்டு ஒருநாள் போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டிருந்தது.
எனினும், தற்போது அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையுடன் கலந்தாலோசித்து ஒருநாள் போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது இரண்டு ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பெப்ரவரி இரண்டாம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6 முதல் 10ஆம் திகதி வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஒருநாள் போட்டிகள் ஆரம்பத்தில் ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் தற்போது கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்திற்கு மாற்றப்பட்டலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவுஸ்திரேலியா அணி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.