பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது
கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.
புதன்கிழமை அதிகாலையில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் யூனைக் கைது செய்ய அவரது இல்லத்தில் அணிவகுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்தவொரு வன்முறையையும் தவிர்க்க விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளதாக யூன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
யூனைத் தடுத்து வைக்கும் முயற்சிகள் சட்டவிரோதமானவை என்றும், அவரைப் பகிரங்கமாக அவமானப்படுத்த வடிவமைக்கப்பட்டவை என்றும் யூனின் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
அவரது கைதுக்காகப் பெறப்பட்ட பிடியாணை, பதவியில் இருக்கும் தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட முதல் பிடியாணையாகும்.
யூன் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்த நிலையில், யூன் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே சிறிய மோதல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனின் இராணுவச் சட்டம் பற்றிய அறிவிப்பு தென் கொரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆசியாவின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றை முன்னோடியில்லாத அரசியல் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
இதனால் டிசம்பர் 14ஆம் திகதி பதவி நீக்கம் செய்து, கடமைகளில் இருந்து நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டை நிலைநிறுத்தி, அவரை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.