தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மகளை கடத்திய நபர்கள் – காதலன் உள்ளிட்ட இருவர் கைது

தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மகளை கடத்திய நபர்கள் – காதலன் உள்ளிட்ட இருவர் கைது

தெரணியகல, தெலொலுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, ஒரு பெண்ணின் தலையில் துப்பாக்கியை வைத்து, அவரது 18 வயது மகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் காதலன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நேற்று (13) கைது செய்துள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியோவிட்ட, மணிக்கந்த மற்றும் கதங்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (12) இரவு தனது 18 வயது மகள் கடத்தப்பட்டதாகக் கூறி, இளம் பெண்ணின் தாயார் தெரணியகல பொலிஸில் செய்த புகாரைத் தொடர்ந்து, பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டன.

அதன்படி, கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் பிராதான சந்தேகநபரும், கடத்தப்பட்ட யுவதியும் சிறிது காலம் காதல் உறவில் இருந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதற்கு யுவதியின் தாயாரும் குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், யுவதியை, அத்தனகல்ல பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் பல நாட்கள் தங்க வைத்திருந்த பின்னர், கடந்த 12 ஆம் திகதி தெரணியகலவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுதவி தனது தாயாருடன் பேருந்தில் தெரணியகலவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் கெலிஓயா பகுதியில் 19 வயதான மாணவி ஒருவர் வானில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், குறித்த மாணவி நேற்று அம்பாறையில் வைத்து மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேகநபரும் கைது செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This