ஐரோப்பிய சந்தையில் மொஸ்கொவின் ஆதிக்கத்தை குறைத்த உக்ரைன் – புத்தாண்டின் பின் போர் தீவிரமடையும் அபாயம்

ஐரோப்பிய சந்தையில் மொஸ்கொவின் ஆதிக்கத்தை குறைத்த உக்ரைன் – புத்தாண்டின் பின் போர் தீவிரமடையும் அபாயம்

உக்ரைன் வழியாக செல்லும் ரஷ்யாவின் சோவியத் கால எரிவாயு குழாய்களை நேற்று புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நிறுத்தியதால் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதி முடிவுக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய எரிவாயு சந்தையில் பல தசாப்தக்கால மொஸ்கோவின் ஆதிக்கத்தை இந்த தடை முடிவுக்கு கொண்டுவருவதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக தொடர்கிற போதிலும் எரிவாயு குழாய்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன. ரஷ்யாவின் எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம், உக்ரைனுடனான போக்குவரத்து ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்ததை அடுத்து குழாய்களின் செயல்பாடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

ஸ்லோவாக்கியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயுவை விநியோகித்து வருகிறது. குழாய்கள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கருங்கடலின் கீழ் கேபிள் குழாய் வழியாக ஹங்கேரிக்கு ரஷ்யா தொடர்ந்து எரிவாயுவை விநியோக்கிக்கிறது.

ஆனால் உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாவில் இருந்து பிரிந்த ரஷ்ய சார்பு பகுதியான Transdniestria உக்ரைன் வழியான எரிவாயுவையே நம்பியுள்ளது.

எரிவாயு விநியோகம் இன்மையால் நேற்று புதன்கிழமை Transdniestria  வீடுகளுக்கு வெப்பமூட்டும் மற்றும் சூடான நீர் விநியோகிக்கும் செயல்பாடு துண்டிக்கப்பட்டது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள டெலிகிராம் செய்தியில், தனது நாடு வழியாக ஐரோப்பாவிற்கு மேற்கொள்ளப்பட்ட ரஷ்யாவின் எரிவாயு பரிமாற்றத்தின் முடிவு “மாஸ்கோவின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாகும்” எனக் கூறியுள்ளதுடன், ஐரோப்பாவிற்கு அதிக எரிவாயுவை வழங்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவும் முன்னாள் சோவியத் யூனியனும் அரை நூற்றாண்டாக ஐரோப்பிய எரிவாயு சந்தையில் பெரும் பங்கைக் கட்டியெழுப்பியுள்ளது. இது சந்தை தேவையில் 35 வீதத்தை பூர்த்தி செய்கிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து நோர்வேயில் இருந்து குழாய் எரிவாயுவையும், கத்தார் மற்றும் அமெரிக்காவிலிருந்து எல்.என்.ஜி யை வாங்கியதன் மூலம் ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.

போக்குவரத்து ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்த உக்ரைன், ரஷ்ய எரிவாயுவை கைவிடுவதற்கான முடிவை ஐரோப்பா ஏற்கனவே எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.

“ரஷ்ய எரிவாயு போக்குவரத்தை நாங்கள் நிறுத்திவிட்டோம். இது ஒரு வரலாற்று நிகழ்வு. ரஷ்யா தனது சந்தைகளை இழந்து வருகிறது. அது நிதி இழப்பை சந்திக்கும்” என்று உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாக்கியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஜேர்மனி மற்றும் ஹங்கேரியில் இருந்து குழாய்கள் வழியாக எரிவாயுவை வழங்குவதாகக் கூறியுள்ளது. ஆனால் இதற்கு விநியோக செலவுகள் அதிகமாக செல்லும்.

எனவே, இந்த விடயத்தில் ரஷ்யாவின் நகர்வு உக்ரைனுடன் உடனான போரை புத்தாண்டின் பின்னர் மேலும் வலுவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share This