
மேட்ச் பிக்சிங் – ஆரோன் ஜோன்ஸுக்கு ஐசிசி தடை
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) ஊழல் தடுப்பு குறியீட்டின் ஐந்து பிரிவுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அமெரிக்க துடுப்பாட்ட வீரர் ஆரோன் ஜோன்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஆரோன் ஜோன்ஸுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற 18 அமெரிக்க வீரர்களில் 31 வயதான ஜோன்ஸ் ஒருவர் ஆவார்.
போட்டிக்கான அமெரிக்க அணி இன்னும் பெயரிடப்படவில்லை என்றாலும், பயிற்சி முகாமில் இருந்து 15 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், இந்தத் தடை காரணமாக ஜோன்ஸ் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் படி, ஜோன்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் முதன்மையாக 2023-24 ஆம் ஆண்டு பார்படோஸில் நடந்த ‘பிம் 10’ போட்டியுடன் தொடர்புடையவை.
இது கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது, எனினும, அவர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகள் சர்வதேச போட்டிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
- மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சங்க நடத்தை விதிகளின் பிரிவு 2.1.1 இன் மீறல்: 2023/24 ‘Bim10’ போட்டியில் ஒரு போட்டியின் முடிவுகள் அல்லது முன்னேற்றத்தை மாற்ற முயற்சிப்பது அல்லது பங்களிப்பது அல்லது மேட்ச் பிக்சிங்.
- மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் விதிகளின் பிரிவு 2.4.2 இன் மீறல்: ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட பெறப்பட்ட அழைப்புகள் அல்லது அணுகுமுறைகள் பற்றிய தகவல்களை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு வெளியிடத் தவறியமை.
- மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் விதிகளின் பிரிவு 2.4.4 ஐ மீறுதல்: அங்கீகரிக்கப்பட்ட ஊழல் தடுப்பு அதிகாரியால் நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தமை.
- ஐ.சி.சி விதிகளின் பிரிவு 2.4.4 ஐ மீறுதல்: சர்வதேச மட்டத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்கத் தவறியமை.
- ஐ.சி.சி. விதிகளின் பிரிவு 2.4.7 இன் மீறல்: ஆதாரங்களை மறைப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைகளைத் தடுப்பது.
இது ஒரு பரந்த விசாரணையின் ஒரு பகுதி என்றும், எதிர்காலத்தில் மற்ற வீரர்கள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஆரோன் ஜோன்ஸ், அமெரிக்க அணிக்காக 52 ஒருநாள் போட்டிகளிலும், 48 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணியின் வரலாற்று வெற்றிகளுக்கு அவர் பெரும் பங்களிப்பைச் செய்தார், கனடாவுக்கு எதிராக 40 பந்துகளில் 94 ஓட்டங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களும் குவித்திருந்தமை குறிப்பிடத்தகப்பது.
