கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவு

கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவு

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மெய்நிகர் மூலமாகக் கூடியது. இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாது,

“இலங்கை அரசு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருப்பதால் மாகாண சபைத் தேர்தல் பல வருடங்கள் தள்ளிப்போகலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன்,

தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கான அழுத்தங்களை ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும், மாகாண சபைத் தேர்தலின் அவசியத்தை இராஜதந்திர சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியா, நெதர்லாந்து, மற்றும் கனடா தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் அரசு கொண்டுவர யோசிக்கும் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், அந்த யாப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும், அதில் அடங்க வேண்டிய விடயங்கள் குறித்தும் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கருத்தொற்றுமைகள் ஏற்படுத்தப்பட்டு ஒருமித்த ஒரு தீர்வுத் திட்டத்தை அரசிடம் கையளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பல்வேறுபட்ட ஜனாதிபதிகளால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு வரைவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றை ஆராய்ந்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரைவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.” – என்றுள்ளது.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )